புதிய வரவுகள் »

வெள்ளி, 14 மார்ச், 2014

வீழ்விலும் எழுவர்!


பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகிய நால்வரின் தூக்கை நயன் மன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தவுடன் அவர்களை விடுதலை செய்ய தமிழக சட்டமன்றில் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட போது எழுதப்பட்டது...

ஆண்டுகள் இருபத் தொன்றை
ஆரியக் கொடுஞ்சி றைக்குள்
நீண்டதோர் கொடுமைக் காளாய்
நேர்ந்துமே நெஞ்சு டையா(து)
ஈண்டுள நயன்மை மன்றின்
இசைவுறு தீர்ப்பைப் பெற்று
மீண்டுள ஏழு பேரே!
வீழ்விலும் எழுவீர் நீரே!

கெடுதலை இயற்றி யோராய்க்
கீழினும் கீழோர் உம்மைத்
தடுத்திருட் சிறையி லிட்டுத்
தமிழரைத் துயரில் ஆழ்த்த
நடுநிலை அற்ற நாட்டில்
நயன்மைமேல் வைத்த பற்றால்
விடுதலை பெற்று வீர
விடியலாய்க் கிளர்ந்தெ ழுந்தீர்

தொண்டையில் தூண்டில் முள்போய்த்
துளைத்திடத் துடிது டிக்கும்
கெண்டையின் நிலையின் கீழாய்க்
கிடந்தஎம் மறவர் காள்!நீர்
பண்டுநாள் பழிக ளைந்து
பகலவன் போலெ ழுந்தீர்
நன்றுநீர் வாழ வேண்டி
நான்நலம் பாடு கின்றேன்.

வெள்ளி, 31 ஜனவரி, 2014

டெசோ! (வ.வா.ச) 5



டெசோ!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)



வில்லடி யாலே அன்று
      வென்றவன் ராமன்; பக்தன்
கல்லடி தந்த தாலே
      கனிந்தவன் ஈசன்; இன்றோ
செல்லடி யாலே நம்மைச்
      சிங்களர் கொன்றார்; நானோ
சொல்லடி யாலே அந்தத்
      துடுக்கரைக் வெல்வேன்; ஆணை!

பேசியே நாட்டை ஏய்த்த
      பெருமையிற் குரியோன் என்னை
ஏசியே பெருமை கொள்ளும்
      ஏந்திழை கண்டு நாணிக்
கூசியே சாகும் வண்ணம்
      குவலயத் தீழம் என்றன்
ஆசியால் விடுத லைபெற்(று)
      ஆங்குறும்; தமிழ்மேல் ஆணை!

அறிக்கைகள் விட்டு விட்டே
      அலரிடச் செய்வேன்; ஆளும்
வெறித்தன சிங்க ளர்க்கு
      வெறுப்பினை ஏற்ப டுத்தும்
குறிப்பினை எடுத்துக் கூறிக்
      குடைசலைத் தருவேன்; என்றன்
நரித்தன தின்முன் அந்த
      நாய்களா நிற்கக் கூடும்?

ஆருக்கும் அடங்கி டாமல்
      ஆடிடும் இராஐ பக்சே
நேருக்கு நேர்நின் றேநான்
      நிகழ்த்துவேன் சோற்போர்; அந்தப்
போருக்கு நடுவர் என்தாய்
      சோனியா; படம்பி டித்துப்
பாருக்குக் காட்ட வன்றோ
      பண்ணினோம் கலைஞர் டி.வி.

சிலம்பிலே ஈழம் ஆண்ட
      செந்தமிழ் மன்னன் பற்றி
நலம்படக் கூறி யுள்ளார்
      நற்றமிழ் இளங்கோ; ஆக
வளம்பல கொண்ட நாட்டை
      வந்துபின் நாளில் பற்றித்
தளமென ஆக்கிக் கொண்டார்
      தடியராம் காடை யர்கள்!

(தொடரும்)

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

டெசொ! (வ.வா.ச) 4



டெசோ!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)


அறைகுறை தமிழ்ப டித்தே
      அருந்தமிழ் அறிஞன் என்ற
நிறைகுடப் பெயரெ டுத்து
      நிற்கின்ற என்னைப் பார்த்துக்
குறைபலச் சொல்லு கின்றார்
      குறுகிய மனத்தர்; என்றன்
நிறைகளைச் சொல்லு கின்றேன்
      நீங்களே நிறுத்துப் பார்ப்பீர்;

தும்பைஏன் விட்டேன்? வாலைச்
சொடுக்கியே வீழ்த்திக் காட்டும்
தெம்பைநான் பெற்ற தாலே;
      தெரியாதார் போற்கேட் போரே!
கொம்பைஏன் விட்டேன்? முள்ளாய்க்
குளம்பிலே குத்திச் சாய்க்கும்
வம்படி வித்தை கற்று
வல்லமை படைத்த தாலே!

பார்க்கத்தான் முருங்கை; என்னைப்
பற்றிப்பார் புளியங் கொம்பு;
பார்க்கத்தான் சகுனி; வந்து
பழகிப்பார் சாணக் யன்நான்;
பார்க்கத்தான் வெறுங்கை; உள்ளே
பணத்தோட்டம் பூத்துக் காய்க்கும்;
ஆர்க்குத்தான் வாய்ந்த தென்போல்
      அரசியற் சூதும் வாதும்?

நன்முறை வழியில் அன்று
      நாயகம் ஈழம் கேட்டார்;
வன்முறை வழியில் நின்று
      வாங்கவே புலிகள் வேட்டார்;
என்முறை என்ன வென்றே
      இங்குளார் என்னைப் பார்த்துப்
பன்முறை கேட்ப தாலே
      பகருகின் றேன்நான் கேட்பீர்!

சீராடி தமிழர் நாட்டைச்
      சிறப்பாக ஆண்ட வன்நான்;
போராடி ஈழம் வென்றால்
      புதுமையா? உரிமை பேசிக்
கூராடிக் கொண்டால் உண்டா
      கௌரவம்? நானோ கங்கை
நீராடி ஈழம் வெல்வேன்
      நீங்கள்பார்க் கத்தான் போறீர்!

(தொடரும்)

செவ்வாய், 21 ஜனவரி, 2014

டெசோ! (வ.வா.ச) 3



டெசோ!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)



தாய்த்தமிழ் நாட்டை ஆண்ட
      தலைவனென் உதவி கேட்டுச்
சேய்த்தமிழ் ஈழம் கண்ட
      செம்மலேன் அணுக வில்லை?
போய்த்திமிர் போரில் காட்டிப்
      பொன்றிடத் துணிந்தா ரன்றி
வாய்த்திமிர் காட்டும் என்போல்
      வலம்வர அறிந்தா ரில்லை!

பதறிடாச் செயலென் றைக்கும்
      பக்குவம் அடையு மன்றிச்
சிதறிடா தென்று கண்டு
      தெளிந்தத னாலே அன்று
கதறிய ஈழத் தைநான்
      காத்திடத் துடித்தெ ழுந்தே
உதறிட வில்லை என்றன்
      ஊராளும் விரும்பத் தைநான்!

நாற்காலி சிங்க ளர்கள்;
நானிங்கே அமர்ந்த தூவும்
நாற்காலி ஆன தாலே
நானதை விட்ட கன்றால்
நாற்காலி இரண்டும் செர்ந்தே
எண்காலில் ஆடும் என்றே
போர்காலப் பொழுதிற் கூட
      பொறுமையாய் இருந்து விட்டேன்

பெரும்புயல் என்பேச் சென்று
      பேசினீர்; ஆட்சி போனால்
வெறும்பயல் பேச்சென் றன்றோ
      விளம்புவீர்; அதனா லும்தான்
இரும்பென நெஞ்சை ஆக்கி
      இரண்டகம் அதிலே தேக்கித்
துரும்பையும் நகர்த்த வில்லை
      துடித்திடும் ஈழத் துக்காய்!

ஆட்சியை விரும்பு வேனா?
அழிவுறும் ஈழ நாட்டின்
மீட்சியை விரும்பு வேனா?
      விரைந்துசெங் கோலைக் காக்கும்
சூட்சுமம் தெரிந்த தாலே
      துணைபோனே னன்றி ஆங்கே
சாட்சியம் இல்லாப் போர்க்குச்
      சம்மதம் சொல்ல வில்லை!

(தொடரும்)

புதன், 15 ஜனவரி, 2014

டெசோ! (வ.வா.ச) 2



டெசோ!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)


இன்றுநாம் இங்குக் கூடி
      இருப்பதன் நோக்க மென்ன?
அன்றுநம் கண்ணின் முன்னே
      அழிந்தஈ ழத்தை மீட்கச்
சென்றுநாம் செய்ய வாகும்
      செயல்கள்தான் என்ன என்ன
என்றுநாம் கூடி ஆய
      இருப்பதே நோக்க மன்றோ!

‘புலிகளே போன பின்பு
      புத்தீழம் கனவே’ என்னும்
சலிப்பிலே உழலு கின்ற
      தமிழரே! புலிக ளாலும்
எளிதிலே முடிந்தி டாத
ஈழத்தை வென்று காட்டிக்
களிப்பிலே உம்மை ஆழ்த்தக்
களத்திலே இறங்கி விட்டேன்!  

தலைக்குமேல் வெள்ளம் சூழந்த
      தவிப்பிலே கலங்கும் மக்காள்!
‘இலைக்குமேல் கதிரே’* என்றிங்(கு)
      என்பின்னே அணிவ குத்தால்
களைக்குமேல் களையெ டுத்துக்
      கழனியைச் சீராக் கல்போல்
விலைக்குமேல் விலைகொ டுத்தும்
      வெல்லேனோ ஈழத் தைநான்?

பொறுத்தது போதும் என்று
      பொங்கிநான் எழுந்து விட்டால்
ஒறுத்தது போதும் வாரீர்
      ஓடிடு வோமென் பாரே
சிறுத்தநெஞ் சம்ப டைத்த
      சிங்களக் கடையர்; அந்த

நரித்தனம் எனக்கே யுண்டு
      நானிலம் அறிதல் வேண்டும்!


என்னாட்டுத் தமிழர் காள்!நம்
      இனம்முற்றாய் அழிந்த போதும்
பன்னாட்டு மன்றம் கூடப்
      பதறிட வில்லை; இப்போர்
உண்ணாட்டுச் சிக்கல் என்றே
      உதறிடப் பார்த்தா ரன்றித்
தன்னாட்டுச் சிக்கல் போலத்
      தடுத்திட முனைந்தா ரில்லை;


(தொடரும்)

சனி, 11 ஜனவரி, 2014

டெசோ! (வ.வா.ச) 1

டெசோ!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)


முக்கியம் எதுவோ அஃதை
மூடியே மறைத்து விட்டு
மக்கிய பிறகெ டுத்து
மணிக்கணக் காகப் பேசிச்
சிக்கலைத் தீர்ப்ப தாகச்
செப்பிடும் கலையால் இன்றும்
மக்களை திசைதி ருப்ப
வந்துளேன் ஆத ரிப்பீர்!

பலமுறை நாட்டை ஆண்டு
      பகற்கொள்ளை அடித்த போதும்
தலைமுறை ஆளும் ஆசைத்
      தவிப்பினால் தக்க வற்றை
இலைமறை காய்ம றையாய்
      இயற்றியே நல்லோன் போல
நலமுற வாழ்வோன் உம்மை
      நாடினேன் என்சொல் ஏற்பீர்!

செந்தமிழ் நாட்டை ஆளத்
      தேவையோர் மொழிப்போர் என்று
சிந்தையைப் பிழிந்து கண்டு
      செயலிலும் இறங்கி வென்றே
இந்தியிற் கிறங்கல் பாடி
      இந்நாட்டில் இங்கி லீசாம்
மந்தியிற் கிடங்கொ டுத்து
      மகிழ்ந்தவன் என்பின் வாரீர்!

மயிரினும் கீழாய் உம்மை
      மனத்தினில் எண்ணும் போதும்
‘உயிரினும் மேலாம் என்றன்
      உடன்பிறப் புகளே!’ என்று
மயக்கத்தை ஏற்ப டுத்தும்
      மணிமொழி பேசி உம்மை
இயக்கத்திற் கிழுந்து வந்த
      இளவலென் இன்சொல் கேட்பீர்!

தடியெடுத் தானே தாடிக்
      கிழவனும் மூக்கில் போடப்
பொடியெடுத் தானே காஞ்சிப்
      புதல்வனும் ஈழம் காக்க
முடிவெடுத் தான பின்னே
      முறையிட்டார் கனவில்; நானும்
அடியெடுத் தேகு கின்றேன்
      அவ்வழி, அணிவ குப்பீர்!

(தொடரும்)

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

இல்லவே இல்லை!

சாதிக்கோர் சுடுகாடு
நிறையவே உள்ளன
ஒன்றுகூட இல்லை
சாதிக்குச் சுடுகாடு!

செவ்வாய், 27 நவம்பர், 2012

புலிவலம்! 33


கணவனைப் பின்தொடரும்
மனைவிபோல்
தோட்டாவைப் பின்தொடர்கிறது
உயிர்

இரத்த ஈரத்தில்
முளைகட்டுகின்றன
கனவுகள்