புதிய வரவுகள் »

வியாழன், 27 மே, 2010

கற்பும், குஷ்பும்!சொற்பொருத்திச் சோன்னாரே இளங்கோ அன்று
சோலைமகள் கண்ணகியைக் கருத்தில் கொண்டு
நெற்புறத்து முனையளவும் நெறிபி ழையாக்
கற்பதுவே கற்பென்று; இன்றோ இங்கு
கற்பென்றால் என்னவிலை? கேட்கு றாங்க!
கண்ணகியின் உடைமைன்னும் பேசு றாங்க!
நற்றாலி ஏறும்முன் கலவ லாமாம்
நலங்கெடாம ‘காண்ட’மது காக்கு தாமாம்!
தமிழ்ச்செருக்கன்

புதன், 19 மே, 2010

எழுத்துச் சீர்திருத்தம் எனும் சீர்கேடு!


எழுத்துச் சீர்திருத் தம்மெனும் பேரிலே
எழுத்துச் சீர்கெடுத் தின்புறப் பார்க்கிறார்
பழுத்த தீந்தமிழ்ப் பற்றுலார் நாட்டிலே
கொழுத்த இத்தகைக் குக்கலை ஓட்டுவோம்!

பாரில் முன்பதாய்த் தோன்றிய தீந்தமிழ்
நேரொன் றில்லதாய் நின்றுசெ ழித்ததே!
வேரில் தீயினை வைத்ததைத் தீய்க்கவோ
சீரில் லாத்திருத் தஞ்செயப் பார்க்கிறார்?

தன்னை யேபெரும் தக்கறி வாளனாய்
எண்ணி இத்தகைத் தீச்செயல் செய்யிட
உண்ணிப் போந்தரோ? உள்ளுவப் புற்றரோ?
நண்ணி ஆங்கவர் நாவறு தல்நலம்!

காலம் ஆயிரம் தாண்டியே வாழ்கிற
ஞாலத் தாய்மொழி இத்தனை காலமும்
கோலம் மாசுறாக் கொள்கையாற் சீர்மிகுந்(து)
ஆளும் காட்சியை ஆங்கவர் காண்கவே!

சீனத் தில்பல ஆயிர மாயெழுத்(து)
ஆன பொதிலும் அம்மொழி கற்றிட
சீனர் அஞ்சிடார் தீந்தமிழ் கற்றிட
ஏனச் சம்மிக எய்தினீர் செப்புவீர்!

எழுத்தை மாற்றினால் இன்தமிழ் வாழுமாம்
குழந்தை நாடியே கற்குமாம் நத்துமாம்
கிழட்டு நாய்களே நீருமந் நாட்களில்
குழந்தை இல்லையோ? கற்கலை யோதமிழ்?

எழுத்துச் சீர்திருத் தம்மெனும் கேட்டினைப்
பழித்து நீக்குவோம் பைந்தமிழ் வாழவே
அழுத்த மாயிதை ஆற்றுவோம் இங்கவர்
இழுத்த பாதையில் செல்லமா டில்லைநாம்!

தமிழ்ச்செருக்கன்