புதிய வரவுகள் »

சனி, 11 செப்டம்பர், 2010

விடுதலைசெய்!


நாம்தமிழ ராய்வாழ்ந்தோம் நமைப்பிரித்துத் திரவிடராய்
நலியச் செய்து
தாம்சிறந்தார்; தமிழகத்தில் தமிழர்க்காய்த் தமிழ்க்கழகம்
தழைக்கா வன்னம்
வேம்பனையார் காத்திட்டார் விரைந்தந்நாள் கதிரவனார்
வழியில் சீமான்
நாம்தமிழர் கழகத்தை நனிதொடங்கி நடத்துவதால்
நடுக்குற் றாரே!

நானிலமும் திரவிடமே நடைபோட நத்தியவர்
நம்தம் சீமான்
தானியன்று நாம்தமிழர் தனிக்கழகம் தொடங்கியதால்
தலைக்குத் துற்றே
ஏனிவனும் நாம்தமிழர் எனும்பெயரில் ஓர்கழகம்
எழுப்பு கின்றான்
காணிவனை என்செய்தும் கழகமதை மூடிவிடல்
கடமை என்றார்!

ஊனமனம் மேலோங்க உளக்கரவு கொண்டவிந்த
உணர்வில் லாதார்
ஆனவரை துன்பந்தந் தருந்தலைவன் செயல்முடிக்க
ஆசை கொண்டு
மீனவர்கள் தம்துயரை மேடைதனிற் பேசியதை
மிகையென் றாங்கே
மானமிகு சீமானை மறுவுடையார் சிறைவைத்து
மகிழ்கின் றாரே!

விடுதலைசெய்! நாம்தமிழ வேங்கைதனை; இங்குள்ள
மீன வர்க்குக்
கெடுதலைச்செய் துளங்களிக்குங் கீழான காடையரைக்
கேள்வி கேட்கா
நெடுமரமே! திரவிடமே! நேர்நடுவண் அரசே!உன்
நேர்மை யில்லாக்
கொடியமனப் போக்காலே கொலையுண்டார் ஈழத்தார்
கொடுமை ஈதே!

தமிழ்ச்செருக்கன்