புதிய வரவுகள் »

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

யார் ஆளவேண்டும்?
நல்லவன் தானடா வல்லவன் தானடா
நாட்டினை ஆளணும் சின்னப்பையா –அந்த
நல்லவன் வல்லவன் நாட்டினை ஆண்டிட
நாம உழைக்கணும் சின்னப்பையா!

கோட்டைக்குப் போனதும் கொள்ளை அடிப்பதைக்
கொள்கையாக் கொண்டோரைச் சின்னப்பையா –இந்த
நாட்டினை ஆண்டிட நாம விட்டதனால்
நாடு குட்டிச்சுவர் ஆனதையா!

மேடையில் பேசிடும் வக்கனைப் பேச்சுக்கள்
மெய்யென்று நம்பியே சின்னப்பையா –நாம
தேடித் தந்தவெற்றி திசைமாறிப் போனதால்
கோவணமும் களவு போனதையா!

வெட்டிச் சலுகைக்கு வாய்பிளந் தோடிநாம்
வெக்கங் கெட்டதனால் சின்னப்பையா –நாட்டை
வெட்டிக் கூறுபோட்டு விற்றிடுங் கும்பலைத்
தட்டிக் கேட்கும்உரம் இல்லையையா!

இன்னும் இவர்களை ஏற்றியும் போற்றியும்
இருப்பது மடமை ஆகுமையா –அந்தச்
சின்ன மதிகொண்ட தீயரை ஓட்டிட
சிந்தித் தொன்றுபட வேண்டுமையா!

சனி, 12 பிப்ரவரி, 2011

அன்றாடம் ஏறுதுங்க விலைவாசி!
அன்றாடம் ஏறுதுங்க விலைவாசி –அது
நின்றால்தான் வாழ்க்கையுண்டு அதையோசி
வறுமை மக்களை சூழ்ந்தாச்சு –இன்னும்
பொறுமை ஏனுங்க அண்ணாச்சி
(அன்றாடம்)
காடு உழுதவன் கஞ்சிக்கு அலைகிறான்
காய்கறி விலைபல மடங்காச்சு
நாடிருக்கும் நிலையில நல்லசோறு தின்பதற்கு
நாதியற்று நிற்கிறான் அன்றாடங்காட்சி –அதை
மாற்றி அமைத்திட நீயோசி
(அன்றாடம்)
அரசுப் பதவியில் அமர்ந்த வனுக்கோ
அன்றாடம் ஊதியம் எகிறுதுங்க
ஆளும் வர்க்கத்தின் அடுப்பைப்போல் ஏழைகளில்
அடிவயி றிங்கே எரியுதுங்க–இந்த
அவலத்தைப் போக்க அறிஞ்சிடுங்க!
(அன்றாடம்)
குறுக்கும் நெடுக்கும் உளறி நடக்கும்
குடிகா ரர்களின் கூடாரம்
குட்டிச்சுவர் ஆகிவிட்ட நாட்டினைச் சீர்படுத்த
கொள்கைவழி நடக்கல இங்குயாரும் –நாட்டைக்
கூறு போடுதுங்க அரிதாரம்!
(அன்றாடம்)
கையில காசுமில்ல வாயில தோசையில்ல
காஞ்சிக் கருகுவது ஏழைகளே
வெளிநாட்டு வங்கிகளில் கோடிகோடி யாப்பணத்தை
வச்சிருக்கும் அரசியல் வாதிகளாலே –வறுமை
வந்ததுங்க நாட்டிலே அதனாலே…
(அன்றாடம்)