புதிய வரவுகள் »

சனி, 24 ஜனவரி, 2009

இவனா தமிழன்!


ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு சும்மாயிருந்தால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவோம் - தமிழக முதல்வர்.

செய்தி -24/1/2009

மோடிவித்தைக் காரனடா முத்தமிழ் அறிஞன்! -இந்த
மூடமதிக் காரனா தமிழினத்தின் தலைவன்?
வேடிக்கை பார்ப்பதென்ன உயிர்போகும் வேளை? -உடன்
நாடிப்போய் அவிழ்ஆடை அள்ளாக்கை என்கை?

போதுமடா சாமியிந்த அரசியல்நா டகங்கள்! -இந்தப்
பொய்யுரைப் புல்லர்களால் பெற்றதென்ற மக்கள்?
ஏதுமில்லை என்றபின்னும் இவர்களையே நம்பி -இன்னும்
இளித்த வாயன் என்றபெயர் ஏனுனக்கு தம்பி?

தமிழ்ச்செருக்கன்!

சனி, 10 ஜனவரி, 2009

நேர்காணல்!முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுடன் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டிய சிறப்பு நேர்காணல்!

நேர் காண்பவர்:- தமிழ்ச்செருக்கன்!

ஆற்றுநீர் கேட்டால் அருந்த நொதிப்பழச்
சாற்றுநீர்* தந்தீர் தகையாமோ!
-மாற்றுநீர்
முந்தைய ஆட்சியர் முன்வைத்தார் நாமதைப்
பின்பற்று கின்றோம் பெரிது!

மதுவின் கடையை அரசுடைமை ஆக்கும்
புதுமையும் என்ன புகல்வீர்!
-மதுவைக்
குடிமகனாய் வாழ்தல் குலப்பெருமை நல்லக்
குடிமகனாய் வாழ்தல் குறை!

ஓடிக் கொடிபிடித்(து) ஒப்பில்செங் கோல்பிடித்துக்
கோடிகளைச் சேர்க்கும் கொடுமையென்ன? -
கூடடைந்து
தேனெடுத்தோன் நத்திப் புறங்கையை நக்கானோ!
நானுமதைச் செய்தேன் நயந்து!

திட்டங்கள் யாவும் திருடுதற் கென்றறிந்தும்
சட்டங்கள் ஏனிங்கே சல்லடையாய்? -
கொட்டமடித்(து)
ஓடி வெளியேற ஊழல் பெருச்சாலி
தேடி அமைத்த திவை!

"வரிவிலக்குச் செய்தால் வளர்தமிழும் வெள்ளித்
திரைவாழும்" என்றவர்யார் செப்பும்! -
உரைக்குங்கால்
தாழுமென் றெண்ணித் தவிப்பதேன்? நன்றாய்நான்
வாழத் தமிழ்வாழும் வந்து!

தமிழ்வழிக் கல்விக்குத் தக்கவழி காணா(து)
அமிழ்வதேன் ஆங்கிலத்தை அண்டி? -
நமக்கெதிரி
இந்தியன்றி ஆங்கிலம் இல்லையப்பா! ஆங்கிலத்தில்
சிந்திக்கின் சேரும் சிறப்பு!

நாய்மொழியும் தாய்மொழியில் நன்கமைய நற்றமிழர்
தாய்மொழியோ நாய்மொழிபோல் நாறிடுதே! -
தாய்மொழியாய்
ஆங்கிலமும், வாய்மொழியாய் ஆரியமும் ஆகுங்கால்
நீங்கிவிடும் இந்த நிலை!

சன்டி.வி யார்டி.வி? என்டி.வி உன்டி.வி
என்றடித்துக் கொள்ளும் இழிவுமேன்? -
பொன்முட்டை
போடுகிற வாத்தப்பா! போக விடலாமா?
கூடும் வரைகறத்தல் கோள்!

தொலைக்காட்சி தந்துமின் துண்டித்தீர் நீள்வான்
அலைக்காட்சி காண்பதென்(று) ஆங்கே? -
உலைக்கரிசி
ஒற்றை உருவாய்க் குவந்தீய மக்களும்
மற்றதைப் போவார் மறந்து!

திரவிடம் பேசித் திரிகிறீர் அஃதால்
தரவு*ண்டோ சொல்வீர் தகைந்து!* -
திரவிடம்
பேசியே நாட்டைப் பிடித்தோம் பொருள்பற்றும்
வேசியே போலும் விரைந்து!

கொள்ளுங்கால் மக்களைக் கோமாளி ஆக்குமக்
கொள்கை உமக்குமெனக் கொள்வதுண்டா? -
கொள்கையெலாம்
தொண்டர்க்கே யன்றித் தொகுத்த தவைவனுக்கும்
உண்டென்பார் யாரே உரை!

தீட்டணி என்பீர் எதிரணிசேர்ந் தாரொடுபின்
கூட்டிணி வைத்தலுமோர் கொள்கையோ? -
கூட்டணியே
கொள்கை எனவானால் கூட்டணிக்குள் கொள்கையுமேன்?
கொள்கை புதையின் குழி!

வாக்களித்த மக்களும் வாழ வகைகாணா(து)
ஏக்கமுறச் செய்தல் இசையாமோ? -
வாக்கிற்கு
வாக்குக் கொடுத்தோமே வாய்மொழியாய்; வேறெதையும்
மேற்கொண்டு கேட்பதெல்லாம் வீண்!

இன்னுமா உம்மை இழவெடுத்தோர் நம்புகிறார்?
ஒன்னுமா* இந்த உணர்வலைகள்? -
என்னபண்ண?
வண்ணத் தொலைக்காட்சி வக்கணையாய் வாய்ப்பேச்சு
நண்ணுவார்* இந்த நகைக்கு!

வேசிச் சிரிப்பாலே வேதனையைத் தூண்டாதீர்
யோசனையென் நாட்டின் உயர்வுக்கு? -
யோசனையா?
சாதிக் கொருகட்சி வீதிக் கொருகட்சி
தேதிக் கொருகட்சி செய்!

புற்றீசல் போலப் புதுக்கட்சி கள்கண்டால்
உற்றிடுமோ இந்நா(டு) உயர்வனைத்தும்? -
அற்றமறந்(து)
ஆங்குறு கட்சிகளின் ஆதரவில் நாடாள்வோம்
தீங்கிலை நாட்டிற்கு தேர்!

மத்தியில் நீர்சொன்னால் மாட்டேன்என் பாரோதான்?
நத்திப் புலி*க்காய் நவிலீரோ? -
சித்தம்*
பரிசுவரும் என்றால் பணிப்பேன்*; பணிக்கேன்*
துரிசு*வரும் என்றால் துணிந்து!

ஈழம் தமிழர்க்கே என்றெடுத் தோதாமல்
மேழம்*போல் ஏன்வெறும்வாய் மெல்லுகிறீர்? -
ஏயம்*
எனக்கருதி விள்ளா* திருந்திட்டேன் நீயும்
‘எனக்கென்ன?’ என்றே இரு!

ஐந்துமுறை ஆண்டும் அலுப்பிலையோ? நாடிதனை
ஐந்நூறும் ஆளும் அவாஉண்டோ?
-பைந்நிறைந்தும்
நெஞ்சில் நிறைவில்லை நேரெனக்குப் பின்னென்றன்
சந்ததியும் நாடாளும் சார்ந்து!

நக்கல் நயப்பேச்சும் சிக்கல் செழும்பேச்சும்
மிக்குடையாய்! வாழும் மிடுக்*குரை! -
மக்களாம்
மந்திகளால் வாழும் வகையுற்றேன் வேறென்ன?
தொந்திவளர்க் கின்றேன் தொடர்ந்து!

அருஞ்சொற் பொருள்:-

நொதிப்பழச் சாற்றுநீர் -பழங்களை நொதிக்கவைத்து உண்டாக்கும் பழக்கள்; கோல் -செங்கோல்; தரவு -இலாபம்; தகைந்து -துணிந்து; ஒன்னுதல் -பொருந்துதல்; நண்ணுதல் -பொருந்துதல்; புலி -விடுதலைப் புலிகள்; சித்தம் -திண்ணம்; பணித்தல் -ஆணையிடுதல்; பணிப்பேன் -ஆணையிடுவேன்; பணிக்கேன் -ஆணையிட மாட்டேன்; துரிசு -துன்பம்; மேழம் -ஆடு; ஏயம் -தள்ளத்தக்கது; விள்ளுதல் -சொல்லுதல்

தமிழ்ச்செருக்கன்!

வெள்ளி, 9 ஜனவரி, 2009

அறிமுகம்!

அன்பன்என் பேர்செருக்கன் ஆர்ப்பதெல்லாம் சீர்மரபே
தென்னவன்நான் செந்தமிழின் சீரெடுத்து -மன்னும்
குணத்தமிழர் மாமரபு குன்றா துமக்கு
வணக்கங்கள் வைக்கின்றேன் வந்து!


தமிழ்ச்செருக்கன்!