புதிய வரவுகள் »

புதன், 23 ஜூன், 2010

கண்ணுறங்கு!


சீராரும் செந்தமிழைச் சீரழிக்க வந்தவனே!
பேராரும் தமிழினத்தைப் பேரிடரில் விட்டவனே!
நீரோடுந் தமிழ்நிலத்தில் நீர்வற்றச் செய்தவனே!
வாராதோ சாவுனக்கு? வரும்வரையில் கண்ணுறங்கு!


தன்குடியே நாடாளத் தக்கதெலாஞ் செய்பவனே!
தன்பெயரில் தொலைக்காட்சி தந்தவனே! மதுக்கடைகள்
பொன்குவிக்கும் இடமென்று போய்திறந்த பெண்ணவளைப்
பின்பற்றி இந்நாட்டைப் பிணக்காடாய்ச் செய்தவனே!

பேணாத ஒழுக்கத்தைப் பேணுவதாய்ப் பறைசாற்றும்
நாணாத நெஞ்சினனே! நாத்தழும்பு கொண்டோனே!
காணாத இனமாகக் கவின்தமிழர் போயொழிய
வீணான செயலையெல்லாம் விரிப்பவனே கண்ணுறங்கு!

தனையெதிர்க்கும் சான்றோரைத் தற்குறிகள் என்பவனே!
உனைநிகர்த்தோன் இல்லையென ஊரைவிட்டே உரைப்பவனே!
தினையளவும் திருந்தாத தீயவனே! மூப்படைந்த
நிணக்குன்றே! இறப்புனக்கு நேரு(ம்)வரை கண்ணுறங்கு!

செவ்வாய், 22 ஜூன், 2010

அழிப்பது தமிழினை ஆம்!



பழுத்தசெந் தமிழதன் பயனுறு மெழுத்தினைக்
கொழுத்தகீழ் விலங்குகள் குறையெனத் திருத்துதல்
ஒழுக்கமில் செயலென ஓது!

கொழுத்தபின் வளைதனில் குடியிரா உயிரிபோல்
செழித்தசெந் தமிழினால் செழிப்பெலாம் அடைந்தபின்
அழிப்பது தமிழினை ஆம்!

கழுத்தினை அறுப்பதும் கடமையோ? தமிழினால்
கொழுத்தபின் தமிழ்க்கொலை புரிவதோ? பிழைத்தவும்
இழுத்துநா அறுத்திடல் ஏற்பு!

தமிழ்ச்செருக்கன்!